முதல் ஒருநாள் போட்டி - இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி

 
INDvsNZ

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வருகிறார். ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ind vs nz

இதையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணியில்,   தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சுப்மன் கில் 50 ரன், ஷிகர் தவான் 72 ரன் எடுத்து அடுத்தடுத்து ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 15 ரன்னிலும், அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.  சாம்சன் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அய்யர் 80 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதிரடியாக ஆடிய வாஷிங்டன் 16 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பாக விளையாடியது. கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லதாம் ஆகியோர் சிறப்பான கூட்டணி அமைத்து அணியை வெற்றி பெற செய்தனர். டாம் லதாம் சதம் விளாசியதோடு, 145 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேன் வில்லியம்சன் 94 ரன்கள் சேர்த்து கடைசி வரும் களத்தில் இருந்தார். நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.