பந்துவீச்சில் மிரட்டிய இந்தியா - நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்

 
IND

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டி கடந்த 18ம் தேதி நடைபெற்றது.  இதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.  இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.  இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ind

இதன் காரணமாக முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.  அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த பின் ஆலெனை ஷமி முதல் ஓவரிலேயே வீழ்த்தினார். இதையடுத்து களம் புகுந்த நிகோல்ஸ், டேரில் மிட்செல், கேப்டன் லதாம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரக் கான்வே அகியோரும் இந்திய வேகப்பந்து வீச்சில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 15 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தற்போது கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய பிரேஸ்வெல் 22 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அந்த அணி 21 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால் அந்த அணி 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.