உலக தடகள சாம்பியன்ஷிப் - நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி

 
Neeraj chopra

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா மற்றும் ரோகித் யாதவ் ஆகியோர் பங்கேற்றனர். இதில் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில், 88.39 தூரம் எறிந்து இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதேபோல் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற செக் குடியரசின் ஜாகுப் சவால், 85.23 மீட்டர் தூரம் எறிந்து இறுது சுற்றுக்கு முன்னேறினார்.


குரூப் ஏ' பிரிவிலிருந்து நீரஜ் சோப்ரா தகுதி பெற்ற நிலையில், 'குரூப் பி' பிரிவிலிருந்து மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் தகுதி சுற்றில் போட்டியிட உள்ளார். ஈட்டி எறிதல் இறுதி சுற்று இந்திய நேரப்படி நாளை மறுதினம் (ஞாயிற்றுக் கிழமை) காலை 7.05 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் நீரஜ் பதக்கம் வெல்லும் பட்சத்தில், 19 ஆண்டுக்குப் பின் உலக தடகளத்தில் பதக்கம் வென்ற இந்தியர் என்ற சாதனை நீரஜ் சோப்ரா படைப்பார். கடைசியாக 2003 உலக தடகளத்தில் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், இந்தியாவுக்கு வெண்கலம் வென்று தந்தார். இதன் பின் இந்தியா ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை. இந்நிலையில், 19 ஆண்டுக்குப் பின் நீரஜ் சோப்ரா பதக்கம் வெல்வார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.