போருக்கு தயாராகும் சிங்கம்! - தோனியின் வலைபயிற்சி வீடியோ செம்ம வைரல்!

 
dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. மேலும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்திய அணிக்கு டி20 உலக கோப்பைல்,  ஒருநாள்  உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் எம்.எஸ் தோனி. இவர் கடந்த 2019-ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இப்போது அவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த சீசனுக்கான ஐபிஎல் சீசனிலும் சென்னை அணியின் கேப்டனாக டோனி செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.  


இதனிடையே 16வது சீசன் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.  இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போதே வலைப்பயிற்சியை தொடங்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தனது கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று டோனி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.