இந்திய அணியின் பந்துவீச்சில் குறைகள் உள்ளன - கபில் தேவ்

 
Kapil dev

இந்திய அணியின் பந்துவீச்சு முன்னேறி இருந்தாலும் ஆங்காங்கே குறைகள் இருக்கிறது என முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். 

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 12 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகின்றன. சூப்பர் 12 போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை  வீழ்த்தி நான்கு புள்ளிகளுடன் குரூப்2 புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதேபோல் நாளை பெர்த்தில் நடைபெறவுள்ள போட்டியில் தென் ஆப்ரிக்க அணியுடன் மோதவுள்ளது. 

ind


 
இந்நிலையில், இந்திய அணியில் சில குறைகள் இருக்கத்தான் செய்கிறது என்று கபில்தேவ் கூறி உள்ளார். இதுகுறித்து கபில்தேவ் கூறியதாவது:- இந்தியாவின் பந்துவீச்சு மெருகேறி வருகிறது. பேட்டிங்கில் நாம் கூடுதலாக ரன் அடிக்க வேண்டும். ஆனால் கடைசி பத்து ஓவர்களில் பேட்ஸ்மேன்கள் 100 ரன்களுக்கு மேல் அடித்து சமாளித்து விடுகிறார்கள். ஆஸ்திரேலியாலில் மைதானங்கள் அனைத்தும் பெரியது. இதனால் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். இந்திய அணியின் பந்துவீச்சு முன்னேறி இருந்தாலும் ஆங்காங்கே குறைகள் இருக்கிறது. நெதர்லாந்து போன்ற அணிக்கு எதிராக கூட நாம் சரியான திட்டமிடாமல் பந்துவீசினோம். அது போன்ற ஆட்டத்தை நீங்கள் ஒரு பயிற்சியாக நினைக்க வேண்டும். அந்த ஆட்டங்களில் நீங்கள் நோபால், வைடு வீசக்கூடாது. சூர்யகுமார் தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் ரன்களை வேகமாக அடிக்கிறார். இதனால் அவரை அதிகமாக பாராட்ட வேண்டும். இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமாகும். விராட் கோலியை பொருத்தவரை அவர் 20 ஓவரும் நின்று விளையாட வேண்டும். ஏனெனில் அவர் எப்போது வேண்டுமானாலும் வேகமாக அடித்து ரன் குவிக்கலாம். இவ்வாறு கபில்தேவ் கூறினார்.