இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டி - கேன் வில்லியம்சன் விலகல்

 
Kane williamson

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி, மவுண்ட் மாங்கனுயி நகரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் தடுமாறினாலும், சூர்யகுமாரின் அதிரடியால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. சிறப்பான ஆட்டடத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 51 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 192 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர் முடிவில் 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக அந்த அணி கேப்டன் வில்லிம்சன் 61 ரன்கள் குவித்தார். கான்வே 25 ரன் எடுத்தார். இதையடுத்து 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.   

NZ

மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை மருத்துவரை சந்திப்பதற்காக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரது முழங்கை வலி பிரச்சினைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார். எங்கள் வீரர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்லாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3வது டி20 போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

..