கேப்டன் கூல் இஸ் பேக் - சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி

 
dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ரவீந்திர ஜடேஜா மீண்டும் கேப்டன் பதவியை எம்.எஸ். தோனியிடமே ஒப்படைத்துள்ளார். 

ஐ.பி.எல். சீசன் தொடங்கியது முதல் கடந்த முறை கோப்பையை வென்றது வரை சென்னை அணியின் கேப்டனாக தோனி இருந்து வந்தார். இதுவரை தோனியின் தலைமையில் சென்னை அணி 4 முறை கோப்பையை வென்றதோடு, 5 முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதேபோல் கடந்த 2020 சீசனை தவிர அனைத்து சீசன்களிலுமே சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்நிலையில், நடப்பு சீசன் தொடங்குவதற்கு முன்பே சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய நிலையில் ரவீந்திர ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

jadeja

இவரது தலைமையில் இந்த சீசனில் விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில், 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சி மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் கேப்டனாகியதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவால் சரிவர போட்டியில் கவனம் செலுத்தவும் முடியவில்லை. இதனால் அவர் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் சொதப்பி வந்தார். சென்னை அணிக்கு இன்னும் 6 போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்ற நிலையில் உள்ளது.

jadeja

இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள ரவீந்திர ஜடேஜா, கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார். போட்டியில் கவனம் செலுத்த முடியாததால் கேப்டன் பொறுப்பை தோனியிடம் ஒப்படைக்க முடிவு செய்ததாகவும், தோனியும் தனது முடிவை ஏற்றுக்கொண்டு, மீண்டும் கேப்டனாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஜடேஜா தெரிவித்துள்ளார். தோனி மீண்டும் சென்னை அணியின் கேப்டனாக களமிறங்கவுள்ளது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் தோனி மீண்டும் கேப்டனாகிறார் என்ற செய்தி மற்ற அணிகளை சற்று அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே நாளை நடைபெறவுள்ள போட்டியில் ஐதராபாத் அணியுடன் சென்னை அணி மோதவுள்ளது.