விராட் கோலி வெளியே... ராகுல் உள்ளே... மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 அணி அறிவிப்பு

 
virat

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விராட் கோலி இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஒருநாள் தொடரில் விளியாடி வருகிறது. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ள நிலையில், 17ம் தேதி மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. 


நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி மற்றும் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இருப்பினும் இருவரும் பிட்னஸ் பரிசோதனையில் தேர்ச்சி பெறவேண்டியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வினும் அணிக்கு திரும்பியுள்ளார். தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோரும் இந்திய அணியில் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி வீரர்கள் விவரம் : ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான், கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஸ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ஆர்.அஸ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப் சிங் உள்ளிட்டோர் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர்.