சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? - கேப்டன் ஹர்திக் பாண்டியா விளக்கம்

 
Hardick

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஏன்? என்பது குறித்து கேப்டன் விளக்கம் அளித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி, மவுண்ட் மாங்கனுயி நகரில் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நேபியரில் நடைபெற்றது.  முதலாவதாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 161 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி டிரா செய்யப்பட்டது. டி.எல்.எஸ் முறைப்படி இரு அணிகளும் சம ரன்ரேட்டில் இருந்ததால் போட்டி டை செய்யப்பட்டது. இதன் காரணமாக மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

sanju samson

இந்நிலையில் இதற்கு ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார். அதில், வெளியில் என்ன பேசிக்கொண்டாலும், அது அணியில் எங்களை பாதிக்கவே பாதிக்காது. இது என்னுடைய அணி. பயிற்சியாளருடன் இணைந்து யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து தான் எடுக்கிறேன். ஒவ்வொருவருக்கும் நேரம் வரும் போது, அவர்களுக்கான வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். இது ஒரு சிறிய தொடராகும். ஒருவேளை இது நிறைய போட்டிகள் கொண்ட தொடராக இருந்திருந்தால் நிச்சயம் அனைவரையும் பயன்படுத்தி பார்த்திருப்போம். நீங்கள் இந்திய அணியில் இருக்கிறீர்கள், ஆனால் ஆடும் லெவன் அணியில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, அது கடினம். வீரர்கள் மோசமாக உணர்ந்தால் என்னிடம் வந்து பேசலாம், அல்லது பயிற்சியாளரிடம் சென்று பேசலாம், நான் கேப்டனாக இருந்தால், அது ஒரு பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் எனது இயல்பு எல்லாரும் ஒன்றாக இருப்பதை உறுதிசெய்யும் வகையில் உள்ளது.