ஒரு கவுண்டி சீசனில் 3 இரட்டை சதம் - 118 ஆண்டுகளுக்குப் பிறகு புஜாரா சாதனை

 
pujara


கவுண்டி கிரிக்கெட்டில் 118 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கவுண்டி சீசனில் 3 இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் புஜாரா படைத்துள்ளார். 

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான புஜாரா தற்போது இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா, 18 சதங்கள் உட்பட 43.82 சராசரியுடன் 6792 ரன்களை குவித்துள்ளார்.  கடந்த சில மாதங்களாக மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக அவதிப்பட்டு வரும் புஜாரா, இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்புவதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் புஜாரா தற்போது இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். கவுண்டி கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய புஜாரா இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார். 

pujara

இதனை தொடர்ந்து மீண்டும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். சக்சஸ் அணிக்காக விளையாடி வரும் புஜாரா, அந்த அணியின் கேப்டனுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து அந்த அணியின் கேப்டனாக புஜாரா நியமிக்கப்பட்டார்.   நேற்று முன்தினம் சக்சஸ் அணி, மிடில்செஸ் அணியை எதிர்த்து களமிறங்கியது.  இப்போட்டியில் முதலில் பேட்டிங்க் செய்த சக்சஸ் அணியில், கேப்டன் புஜாரா 403 பந்துகளில் 21 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 231 ரன்களை குவித்து அசத்தினார்.  இந்த கவுண்டி சீசனில் ஏற்கனவே இரண்டு இரட்டை சதங்களை அடித்துள்ளார். இது மூன்றாவது இரட்டை சதமாகும். இதன்மூலம், 118 வருட கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒருசீசனில் மூன்று இரட்டை சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை புஜாரா படைத்துள்ளார்.