3 ஆண்டுகளுக்கு பின்னர் சதம் அடித்தேன் என கூறுவதா? - ரோகித் சர்மா ஆவேசம்

 
Rohit Sharma

மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் சதம் அடித்ததாக கூறுவது ஏற்புடையது அல்ல என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி  இந்தூரில் நேற்று முன் தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்களை எடுத்தது. இதனையடுத்து 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர் முடிவில்அனைத்து விக்கெட்களையும் இழந்து 295 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்து அணியை வைட் வாஷ் செய்தது. இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டி அணிகள் தர வரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியது. இந்த போட்டியில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் சதம் அடித்திருந்த நிலையில், ரோகித் சர்மா 3 வருடங்களுக்கு பின்னர் சதம் அடித்ததாக ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்தது. 

IND

இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரோகித் சர்மா கூறியதாவது: நான் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தமே 12 ஒருநாள் போட்டியில் தான் விளையாடி இருக்கிறேன். நீங்கள் 3 ஆண்டுகள் என்று பலமாக சொல்வது மிகவும் அதிக காலம் போல் தோன்றுகிறது. என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஒளிபரப்பு நிறுவனம் புள்ளி விவரங்களை சரியான பார்வையில் கொடுக்க வேண்டும். 2020-ம் ஆண்டில் கொரோனா காரணமாக எந்தவித போட்டியும் நடைபெறவில்லை. நாம் அனைவரும் வீட்டில் தான் இருந்தோம். அதன் பிறகு ஒருநாள் போட்டியில் இந்திய அணி பெரிய அளவில் விளையாடவில்லை. காயம் காரணமாக அந்த சமயத்தில் நான் 2 டெஸ்ட் போட்டியில் தான் ஆடினேன். எனவே நீங்கள் இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு இதுபோன்ற செய்தியை வெளியிட வேண்டும். இவ்வாறு கூறினார்.