2 ஓவரில் 5 நோ-பால் வீசிய அர்ஷ்தீப் சிங் - கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியது என்ன?

 
arshdeep and hardick

நேற்றைய போட்டியில் அர்ஷ்தீப் சிங் 2 ஓவர்களில் 5 நோ பால் வீசிய நிலையில், இதுகுறித்து கேப்டன் ஹர்திக் பாண்டியா கருத்து கூறியுள்ளார். 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி புனேவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த இலங்கை அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. 207 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சூர்யகுமார் யாதவ் , அக்சர் படேல் இருவரும் இணைந்து சரிவில் இருந்து மீட்டனர். பந்துகளை சிக்ஸர்கள் , பவுண்டரிக்கு விரட்டி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 51 ரன்களில் வெளியேறினார். அக்சர் படேல் அதிரடியை தொடர்ந்தார். பின்னர் ஷிவம் மாவியும் அதிரடியாக விளையாடினார். இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 21ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் தசுன் ஷானகா வீசிய இந்த ஓவரில் இந்திய அணி 4 ரன்கள் மட்டுமே அடித்தது., அக்சர் படேல் 31 பந்துகளில் 65 ரன்களில் வெளியேறினார். இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. மூன்று போட்டி கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 

axar patel

இதனிடையே இலங்கை அணி பேட்டிங் செய்த போது, இரண்டாவது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 3 நோ பால்களை வீசினார். அத்துடன் அந்த ஓவரில் மட்டும் 19 ரன்களை வழங்கினார். இதனால், அவர் மீது நம்பிக்கை இழந்தது போல் காணப்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, அவருக்கு மீதமுள்ள 4 ஓவர்களையும் வீசுவதற்கு வாய்ப்பு வழங்கவில்லை. இறுதியில் 19வது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங், அந்த ஓவரிலும், 2 நோ பால்களை வீசினார். அத்துடன், 18 ரன்களையும் வாரி வழங்கினார். இரண்டே ஓவர்களை வீசி 5 நோ பால்களுடன் 37 ரன்களை வாரி வழங்கிய அர்ஷ்தீப் சிங்கை பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்து வருகின்றனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, எந்த வடிவத்திலும் நோ-பால் வீசுவது குற்றம் என்பது எங்களுக்குத் தெரியும் இருந்தாலும் 5 நோ-பால் வீசிய அர்ஷ்தீப் சிங்கைக் குறை கூறவில்லை என்றும் கூறினார். மேலும் அவர் கூறும் போது அர்ஷ்தீப்புக்கு அந்த சூழ்நிலை இது மிகவும் கடினமானது. அவரைக் குறை கூறக்கூடாது. இவ்வாறு கூறினார்.