காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் - பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

 
INDW

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 
 
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  முதன் முறையாக காமன்வெல்த் போட்டிகளில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இப்போட்டியில் மொத்தம் 8 அணிகள் மோதுகின்றன. 'ஏ' பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பார்படாஸ் ஆகிய அணிகள் உள்ளன.  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி கடந்த 29ம் தேதி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற நிலையில், அதில் ஆஸ்திரேலியா மகளிர் அணி  3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. அந்த அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 102 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 63* ரன்கள் சேர்த்தார்.