ஸ்ரேயஸ் ஐயர், தவான் அதிரடி - நியூசிலாந்து அணிக்கு 307 ரன்கள் இலக்கு

 
ind vs nz

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 306 ரன்கள் குவித்துள்ளது. 

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. டி20 தொடரில் மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டு வருகிறார். ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ind vs nz toss

இதையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணியில்,   தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 124 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சுப்மன் கில் 50 ரன், ஷிகர் தவான் 72 ரன் எடுத்து அடுத்தடுத்து ஓவர்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 15 ரன்னிலும், அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 4 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டார்.  சாம்சன் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அய்யர் 80 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதிரடியாக ஆடிய வாஷிங்டன் 16 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 306 ரன்கள் குவித்தது.