ரோகித் சர்மா, சுப்மன் கில் சதம் - நியூசிலாந்து அணிக்கு 386 ரன்கள் இலக்கு

 
IND

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 385 ரன்கள் குவித்துள்ளது. 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், கடந்த 21ம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது.  இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.  இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. 

ind

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் களமிறங்கினர். முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டிய இவர்கள் நியூசிலாந்தின் பந்துவீச்சை மைதானத்தின் நாலாபுறமும் பறக்க விட்டனர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. மைதானமும் பேட்டிங்குக்கு உகந்ததாக இருந்தது. அதிரடியாக ஆடிய இவர்கள் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை விரட்டினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோகித் சர்மா, சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார். இது ரோகித்துக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 30வது சதமாக அமைந்தது. இதையடுத்து சுப்மன் கில்லும் சதம் அடித்து அசத்தினார். 

இந்த நிலையில் ரோகித் 101 ரன்னிலும், கில் 112 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் புகுந்த கோலி 26 ரன், இஷன் கிஷன் 17 ரன், சூர்யகுமார் யாதவ் 14 ரன் வாஷிங்டன் சுந்தர் 9 ரன் என அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் 26 ஓவரில் 212 ரன் என்றிருந்த இந்தியாவின் ஸ்கோர் மளமளவென விக்கெட்டுகள் வீழ்ந்ததும் ரன்னும் குறைந்தது. இறுதி கட்டத்தில் சிறிது நேரம் அதிரடி காட்டிய பாண்ட்யா 37 பந்தில் 54 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்தது.