மிரட்டல் பந்துவீச்சு - ஜிம்பாப்வேவை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

 
IND

டி20 உலக கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி  71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் கடைசி சூப்பர் 12  போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார்.  தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித சர்மா, கே.எல் ராகுல் களமிறங்கினர். ரோகித் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ராகுல் அரைசதமடித்து 51 ரன்களில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 26 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 59 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது. 

இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 17.2 ஓவர்கள் முடிவில் 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 71 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் 2 பிரிவில் முதல் இடத்தில் உள்ள இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.