ரோகித், தினேஷ் கார்த்திக் அபாரம் - முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி

 
ind vs wi

 
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் நாட்டிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. ஒருநாள் தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், அதில் மூன்றிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. இந்த நிலையில், முதல் டி20 போட்டி ட்ரினிடாட் பகுதியில் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற்றது.  இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

ind vs wi

இதனையடுத்து முதலாவதாக பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி  தொடக்கத்தில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், சூர்யகுமார் யாதவும் களமிறங்கினர். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் வந்த வேகத்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினார். 7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 50 ரன்கள் சேர்த்து தடுமாறியது. ஆனால் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டி19 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 41 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. 

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி  20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே சேர்ந்தது. இதன் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.