அக்சர் பட்டேல் அபாரம் - தொடரை கைப்பற்றியது இந்தியா

 
ind vs wi

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை, 2க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக ஷிகர் தவான் நியமிகப்பட்டுள்ளார்.  முதல் போட்டியில் இந்திய அணி 3 ரன்களில் வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று இரவு போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்றது. 

ind vs wi

இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க ஆட்டக்காரர் ஷாய் ஹோப் 115 ரன்கள் எடுத்தார். இதேபோல் மற்ற வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் முடிவில்  6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளும், தீபக் ஹூடா, அக்சர் படேல் மற்றும் சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இதனையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் இறுதியில் சிறப்பாக விளையாடியது. தவான் 13 ரன்களிலும், சுப்மன் கில் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ்,  9 ரன்னில் வெளியேறினார். அடுத்ததாக ஸ்ரேயாஸ் அய்யர், சஞ்சு சாம்சன் ஜோடி சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  ஸ்ரேயாஸ் அய்யர் 63 ரன்களிலும்,  சஞ்சு சாம்சன்  54 ரன்களிலும் வெளியேறினர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய அக்சர் பட்டேல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். 49.4 ஓவர்களில் இந்திய அணி 312 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 35 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அக்சர் பட்டேல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இப்போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை, 2க்கு0 என்ற கணக்கில் கைப்பற்றியது.