மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்த இந்தியா

 
ind vs wi

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகளிலும் வென்று அந்த அணியை ஒயிட்வாஷ் செய்துள்ளது. 

மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் – சுப்மன் கில்  ஜோடி முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.  58 ரன்களில் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார்.அடுத்துவந்த ஸ்ரேயஸ் ஐயர் 44 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 8 ரன்களிலும் வெளியேறினார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில்  36 ஓவர்கள் முடிவடைந்த போது 98  ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கிய நிலையில், மழை குறுக்கிட்டாதால் அவரது சதம் பறிபோனது. 

ind vs wi

டக்வொர்த் முறைப்படி இந்திய அணியின் இன்னிங்ஸ் 36 ஓவர்களிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது. இந்திய அணி 36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டு இழப்புக்கு 225 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், டக்வொர்த் முறைப்படி அதே 36 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 256 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அந்த அணி 26 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் நிக்கோலஸ் பூரன் 42 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை ஒயிட்வாஷ் செய்தது.