புவனேஸ்வர் குமார் அசத்தல் - ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

 
INDvsAFG

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில்  இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆபிகானிஸ்தான் அணி கேப்டன் முகமது நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், கேப்டனாக கே.எல்.ராகுல் செயல்பட்டார்.  தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல் விராட் கோலி களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தனர்.  கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய விராட் கோலி சுமார் 1020 நாட்களுக்கு பின்னர் சர்வதேச போட்டிகளில் சதம் அடித்து அசத்தினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது.  61 பந்துகளில் 122 ரன்களுடன் விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

virat

இதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்கம் முதலே சொதப்பியது. 6.5 ஓவர்களிலேயே அந்த அணி 21 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சிறப்பாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார் 4 ஓவர்களுக்கு 4 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இறுதி சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டதால் நேற்றைய ஆட்டம் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.