வேற லெவல் ஆட்டம்! குஜராத்தை வீழ்த்தி மும்பை 2-வது வெற்றி

 
MI

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.

மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் கார்த்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த மும்பை அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் ஷர்மா 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த சூர்யகுமார் யாதவ் 13 ரன்களில் ஆட்டமிழக்க, இஷான் கிஷானும் 45 ரன்களில் வெளியேறினார். திலக் வர்மா 21 ரன்களிலும், பொல்லாட் 4 ரன்களிலும் ஆட்டமிழ்ழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய டிம் டேவிட் 21 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. 

GT

இதனையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் இறுதியில் சொதப்பியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் 52 ரன்களிலும், விரித்திமான் சஹா 55 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய சாய் சுதர்சன் 14 ரன்களில் வெளியேறிய நிலையில், கேப்டன் கார்த்திக் பாண்டியா 24 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் குஜராத் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரை டேனியல் சேம்ஸ் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட மில்லர் 1 ரன்கள் எடுத்த நிலையில், இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ராகுல் திவேட்டியா ரன் எதுவும் எடுக்கவில்லை. இதேபோல் மூன்றாவது பந்தில் இரண்டு ரன்கள் எடுக்க முயன்ற திவேத்தியா ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து 3 பந்துகளுக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 4வது பந்தை எதிர்கொண்ட ரஷித் கான் 1 ரன் எடுத்தார். இதனையடுத்து வந்த மில்லர் கடைசி இரண்டு பந்துகளிலும் ரன் எதுவும் எடுக்கவில்லை. இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது.