முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை - ராஜஸ்தானை வீழ்த்தியது

 
MI

ஐபில் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. 

மும்பையில் உள்ள டி.ஒய். பட்டேல் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில், ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து ராஜஸ்தான் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. 

Butler


 
ராஜஸ்தான் அணி தொடக்கம் முதலே பேட்டிங்கில் சொதப்பியது. தேவ்தத் படிக்கல் 15 ரன்னும், சஞ்சு சாம்சன் 16 ரன்னும், மிட்செல் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்நிலையில் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஜாஸ் பட்லர் அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டார். 16-வது ஓவரின் முதல் 4 பந்துகளை சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் 67 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய அஸ்வின் 9 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 

Tilak varma

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி வழக்கம் போல் தொடக்கத்தில் சொதப்பினாலும், இறுதியில் சிறப்பாக விளையாடியது. துவக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னுடன் வெளியேறினார். இஷான் கிஷன் 26 ரன்களில் நடையை கட்டினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். 39 பந்துகளில் 51 ரன்கள்  எடுத்திருந்த் சூரியகுமார்,  சாகல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 35 ரன்கள் அடித்தார். மும்பை அணி 19.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  மும்பை அணிக்கு இது முதல் வெற்றியாகும்.