காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் - அரையிறுதியில் இங்கிலாந்துடன் இந்தியா மோதல்

 
ind women

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் கடந்த 28ம் தேதி தொடங்கியது.  72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. டி20 வடிவில் நடைபெறும் இந்த போட்டியில் முதலாவதாக மகளிர் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. 

INDW

இதில் குரூப் பி பிரிவில் பங்கேற்றுள்ள இந்திய அணி முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக பாகிஸ்தான் அணியுடன் வெற்றி பெற்றது. இதேபோல் அரையிறுதிக்கு தகுதி பெறும் போட்டியில் பார்படாஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதேபோல் குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணி பங்கேற்ற 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. 

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லுமா என ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.