திக்.. திக்.. ஆட்டம்; கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி

 
IndvsNz

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

Image

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கேப்டன் ரோகித் சிறப்பான தொடக்கம் தந்தாலும் 34 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்து வந்த நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 8 ரன்னில் ஆட்டமிழக்க இஷான் கிசன் 5 ரன்களில்  ஆட்டமிழந்தார். ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகள் விழ, மறுபுறம் சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அற்புதமாக ஆடிய அவர், ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து 200 ரன்களை கடந்தார். தனிப்பட்ட முறையில் 200 அடிக்கும் ஐந்தாவது இந்திய வீரர் சுப்மன் கில் ஆவார். மேலும் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். அற்புதமாக ஆடிய அவர் 149 பந்துகளில் 208 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். 50 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் குவித்தது.

349 என்ற இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே,நிக்காலெஸ், டேரி மிச்சல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 40 ரன்களில் வெளியேறினார். 29 ஓவரில் நியூசிலாந்து அணி 131 ரன்களை எடுத்தது. 6 விக்கெட்டுகளை இழந்து போராடிய போது நியூசிலாந்தின் பிரேஸ்வெல் மற்றும் மிச்சல் சாண்ட்னர் ஆகியோர் சிறப்பாகவும் அதிரடியாகவும் ஆடினார். மிகவும் அதிரடியாக ஆடிய பிரேஸ்வெல் 57 பந்துகளில் சதம் அடித்த அசத்தினார்.

கடைசி ஐந்து ஓவர்களில் 59 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலையில் வந்து பந்துவீசிய முகமது சிராஜ் சான்ட்னரை 57 ரன்களிலும் அடுத்து வந்த சிப்லியை டக் அவுட் ஆக்கி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் கொண்டு வந்தார். கடைசி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் பிரேஸ்வெல் சிக்ஸர் அடிக்க இரண்டாவது பந்தில் எல் பி டபிள்யு முறையில் ஆட்டம் இழந்து  இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

49.2 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 337 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. வெறித்தனமாக ஆடிய நியூஸிலாந்து பேட்ஸ்மனான பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக செயல்பட்ட முகமது சிராஜ் 10 ஓவர்களில் 46 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றினார்.