செஸ் ஒலிம்பியாட் போட்டி - சென்னையில் குவியும் வெளிநாட்டு வீரர்கள்

 
chess olympiad

சென்னையில் நடைபெறவிருக்கும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடர் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் சென்னைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் 28ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. போட்டியினை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரம் போர் பாயிண்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதியில் நடக்க உள்ளது. இதில், 187 வெளிநாடுகளில் இருந்து 2 ஆயிரத்து 500 வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால், சர்வதேச தரத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ஒன்றும் 22 ஆயிரம் சதுர அடியில் ஒன்றுமாக, நவீன விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மொத்தம் 700 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. வீரர்கள் கடற்கரையோரம் விடுதிகளில் தங்குகின்றனர். 

Chess Olympiad

இதற்காக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் சென்னைக்கு விமானம் மூலம் வரத்தொடங்கிவிட்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், ஏற்கனவே 500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சென்னை வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் வரவேற்று மாமல்லபுரம் அனுப்பும் பணியில் தமிழக அரசு அதிகாரிகளும், செஸ் கூட்டமைப்பு வீரர்களும் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.