மரண பயம் காட்டிய சூர்யகுமார் - இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

 
suryakumar

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. 

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், மூன்றாவது டி20 போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனை தொடர்ந்து முதலாவதாக பேட்டிங்க் செய்த இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேவிட் மலான் 77 ரன்களும், லிவிங்ஸ்டன் 42 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ரவி பிஸ்னோய் மற்றும் ஹர்ஷால் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

india

இதனையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது.  ரிஷப் பந்த் 5 ரன்களிலும், விராட் கோலி 11 ரன்களிலும், ரோகித் சர்மா 11 ரன்களிலும் வெளியேறினர். இதனிடையே சற்று நிலைத்து நின்ற ஸ்ரேயஸ் ஐயர் 28 ரன்களில் வெளியேறினார். இந்நிலையில், தனி ஒரு ஆளாக போராடிய சூர்யகுமார் யாதவ் இங்கிலாந்து அணிக்கு மரண பயத்தை காட்டினார். பவுண்டர்கள் மற்றும் சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ், சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். 55 பந்துகளில் 117 ரன்கள் எடுத்து அவர் அவுட்டானர். இதனையடுத்து போட்டி இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியது. இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இங்கிலாந்து அண் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது.