ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ரசிகர்களுக்கிடையே மோதல் - மைதானத்தில் பரபரப்பு

 
clash

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த அந்நாட்டு ரசிகர்கள் பாகிஸ்தான் ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்திய நிலையில், பதிலுக்கு அவர்களும் தாக்கியதால் மைதானமே போர்க்களமாக காட்சி அளித்தது.  

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 4 சுற்றில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இப்ராகிம் ஜட்ரான் 36 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி  இதன் மூலம் 19.2 ஓவரில் 9 விக்கெட்ட இழப்புக்கு 131 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற்ற நிலையில், ஆப்கானிஸ்தான் அணி அந்த வாய்ப்பை இழந்தது. 


ஆப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்ததால் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். போட்டி நடந்த மைதானத்தில் இருந்த இருக்கைகளை வீசி எறிந்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். மேலும், போட்டியை காண வந்திருந்த பாகிஸ்தான் ரசிகர்கள் மீதும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் தாக்குதல் நடத்தினர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது மைதானத்தில் இருந்த இருக்கைகளை ஒருவர் மீது ஒருவர் தூக்கி வீசினர். பின்னர், மைதானத்தில் இருந்து வெளியே வந்த இருநாட்டு ரசிகர்களுக்கு இடையே வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டது. இதனால், சார்ஜா மைதானம் அருகே பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. பின்னர், அங்கு வந்த போலீசார் இரு நாட்டு ரசிகர்களையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.