அடுத்த சீசனிலும் தோனி தான் கேப்டன் - சென்னை ரசிகர்கள் உற்சாகம்

 
dhoni

அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலும் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் தொடங்கியது முதல் 2021ம் ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி கடந்த ஐபிஎல் சீசன் தொடக்கத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து ரவீந்திர ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில், அவரது கேப்டன்சியில் சென்னை அணி படுமோசமான தோல்விகளை சந்தித்தது. இதன் காரணமாக அவர் கேப்டன் பதவியை திரும்பவும் தோனியிடம் ஒப்படைத்தார். இதனிடையே அடுத்தாண்டும் சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடர்வாரா அல்லது வேறு யாராவது கேப்டனாக நியமிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் இருந்து வருகிறது. 

dhoni

இந்த நிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரிலும் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அந்த அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்ட அவர் இந்த தகவலை தெரிவித்தார். இதுவரை தோனியின் தலைமையில் சென்னை அணி 4 முறை கோப்பையை வென்றதோடு, 5 முறை இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இதேபோல் கடந்த 2020 மற்றும் நடப்பு சீசனை தவிர அனைத்து சீசன்களிலுமே சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.