இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்

 
Ben Stokes

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஜோ ரூட் இருந்து வந்தார். இவரது கேப்டன்சியில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27 வெற்றி மற்றும் 26 தோல்விகளை அடைந்துள்ளது. ஜோ ரூட்டின் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டுவந்த இங்கிலாந்து அணி, கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக சொதப்பியது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் படுதோல்வி, ஆஷஸ் தொடரை 0-4 என ஆஸ்திரேலியாவிடம் இழந்தது என படுதோல்விகளை அடைந்தது. ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி  மட்டுமே பெற்றது.  இது கேப்டன் ஜோ ரூட் மீது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த 15-ம் தேதி இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவாதாக ஜோ ரூட் அறிவித்தார். இருந்த போதிலும் ஒரு பேட்ஸ்மேனாக டெஸ்ட் போட்டியில் தொடருவதாகவும் அவர் கூறியிருந்தார். 


இந்நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்து வரும் பென் ஸ்டோக்ஸ் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறார். பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என மூன்று வகைகளிலும் திறன் வாய்ந்தவர் பென் ஸ்டோக்ஸ். இதுவரை இங்கிலாந்து அணிக்காக 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 5061 ரன்கள் குவித்துள்ளார். இதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரையில் 174 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.