தனித்து போட்டியா? அதிமுகவிற்கு ஆதரவா? - பாஜக தேர்தல் குழு இன்று ஆலோசனை

 
bjp

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதா? அல்லது அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பதான் என்பது குறித்து பாஜக தேர்தல் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.  

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோட் கிழக்கு சட்டமன்ற தொகுதி தற்போது காலியாகியுள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்குகிறது.  இதையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகிறது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியே இந்த தேர்தலில் போட்டியிடும் என திமுக அறிவித்துள்ளது. அதிமுகவை பொறுத்தவரையில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.  அ.ம.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி தனியாக போட்டியிடுகிறது. இதேபோல் பாஜகவும் தனித்து போட்டியிட ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 

Erode East

இந்த நிலையில் இடைத்தேர்தல் குறித்து பா.ஜனதா தேர்தல் குழுவினர் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஈரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்கள். ஆளுங்கட்சியான தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசை எதிர்க்க வலுவான கூட்டணி வேண்டும். ஆனால் அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தனித்தனியாக களம் இறங்கினால் காங்கிரஸ் எளிதில் வெற்றி பெற்று விடும். எனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சமரசம் செய்வது தொடர்பாக ஆலோசிக்கிறார்கள். பா.ஜனதா போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என்று ஏற்கனவே ஓ.பன்னீர் செல்வம் கூறி உள்ளார். அதேபோல் புதியநீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் பா.ஜனதா போட்டியிட்டால் வரவேற்போம் என்று தெரிவித்துள்ளார். எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுடன் நேருக்குநேர் மோத பா.ஜனதா தயாராகி வருகிறது.