ஆசிய கோப்பை கிரிக்கெட் : இலங்கை - வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை

 
Srilanka

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் இலங்கை அணியும் வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்  ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்று 5வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இலங்கை அணியும், வங்கதேச அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடக்கத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி இந்த தொடரில் அசத்தி வருகிறது. முதல் போட்டியில் இலங்கைக்கு அதிர்சி அளித்த ஆப்கானிஸ்தான் அணி, இரண்டாவது போட்டியில் வங்கதேசத்தையும் பந்தாடியது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி பி பிரிவில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இதேபோல் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி பி பிரிவில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும் இரண்டாவது அணி என்பதால் இன்றைய போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த இரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 12 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 8-ல் இலங்கையும், 4-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றிருக்கிறது.