ஆசிய கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தான் - இலங்கை அணிகள் இன்று மோதல்

 
pak vs sri

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வரும் நிலையில், அதில் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இறுதிப் போட்டிக்குக் தகுதி பெற்றுள்ளன. இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து வீழ்ந்ததால் இறுதி சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. ஆப்கானிஸ்தானும் ஏற்கனவே இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்து விட்டது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஏற்கனவே இவ்விரு அணிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இருப்பினும் இந்த ஆட்டம் இறுதிப்போட்டிக்கு ஒரு பயிற்சி ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது. இன்றைய போட்டி இறுதி போட்டிக்கு முன்னோட்டம் என்பதால் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.