மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் மோதல்... விற்று தீர்ந்த டிக்கெட்டுகள்

 
indvspak

டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

7-வது டி20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி சுற்றுக்கு முன்னேறும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டிக்காக இப்போதே பல்வேறு நாடுகள் தங்கள் அணியை வலுப்படுத்த தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தங்களது அணியை அறிவித்துள்ளன. இந்தியா தனது முதல் போட்டியில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

indvspak

இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டதாக ஐசிசி அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஐசிசி கூறுகையில், போட்டி தொடங்க இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் உள்ள நிலையில், இந்த உலகக் கோப்பை தவிர்க்க முடியாத நிகழ்வாக அமைகிறது. இன்னும் சில டிக்கெட்டுகள் உள்ளன. எனவே ரசிகர்கள் தங்களுடைய டிக்கெட்டை பாதுகாப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். இவ்வாறு தெரிவித்துள்ளது.