காமன்வெல்த் - பளுதூக்கும் போட்டியில் இந்தியாவிற்கு 4வது பதக்கம்

 
Bindhyarani

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில், பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார். 

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 

இதில், பளுதூக்கும் போட்டியில் இந்தியாவின் பிந்த்யாராணி தேவி 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி இரண்டாம் இடம் பிடித்தார்.  ஸ்நாட்ச் பிரிவில் முதல் முயற்சியிலேயே 81 கிலோ எடையை தூக்கிய பிந்த்யாராணி தேவி, இரண்டாம் முயற்சியில் 84 கிலோ எடையையும் இறுதி முயற்சியில் 86 கிலோ எடையை தூக்கி அசத்தினார். க்ளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் முதல் முயற்சியில் 110 கிலோ எடையை தூக்கியவர், இரண்டாம் முயற்சியில் 114 கிலோ எடையை தூங்குவதில் தோல்வி கண்டார். என்றாலும் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்தினார்.

இதேபோல் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் 201 கிலோ எடையை தூக்கி இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடதக்கது. காமன்வெல்த் பளுதூக்குதலில் இந்தியா ஒரேநாளில் தங்கம், இரண்டு வெள்ளி, வெண்கலம் என 4 பதக்கங்களை அள்ளியுள்ளது பாராட்டுகளை பெற்றுவருகிறது