வழுக்கை, முடிஉதிர்தல் போக்கும் எளிய மூலிகைகள்!

 

வழுக்கை, முடிஉதிர்தல் போக்கும் எளிய மூலிகைகள்!

தலைமுடி பிரச்சினை… ஆண், பெண், பெரியவர், சிறியவர் என எந்தப்பாகுபாடும் இல்லாமல் எல்லாதரப்பு மக்களுக்கும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. பல்வேறு காரணங்களால் முடி கொட்டுதல், பொடுகுத்தொல்லை, வழுக்கை, சொட்டை என பல்வேறுவிதமான பிரச்சினைகளை ஒவ்வொருவரும் எதிர்கொள்கிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நம் அன்றாடச் சமையலில் சேர்த்துக்கொள்ளும் சில உணவுப்பொருள்கள் மூலம் தீர்வு காணலாம். அதுபற்றிச் சொல்கிறார் மூலிகை ஆராய்ச்சியாளர் தமிழ்க்குமரன்.

வழுக்கை, முடிஉதிர்தல் போக்கும் எளிய மூலிகைகள்!

கறிவேப்பிலை:
தலைமுடி பிரச்சினைக்கு கறிவேப்பிலை மிக நல்ல தீர்வு தரும். அன்றாடச் சமையலில் நாம் இதைச் சேர்த்துக்கொண்டாலும் தூக்கி தூர எறியும் முதல் பொருள் இந்த கறிவேப்பிலையே. தினமும் காலையில் கண்விழித்ததும் கைப்பிடி அளவு கறிவேப்பிலையை மென்று சாப்பிடலாம். துவையல், ஜூஸ் வடிவிலும் சாப்பிடலாம். வெறும் கறிவேப்பிலையைச் சாப்பிட பிடிக்காது என்பதால் அதனுடன் கொஞ்சம் மல்லித்தழையும், புதினாவும் சேர்த்து அரைத்து துவையலாக்கிச் சாப்பிடலாம்.

தலைக்கு குளிக்கும்போது கறிவேப்பிலை, மருதாணி இலை, செம்பருத்தி இலை, கரிசாலங்கண்ணிக்கீரை போன்றவற்றை சம அளவு எடுத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம். அத்துடன் இந்த இலைகளை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி எடுத்து தலைக்குத் தேய்க்கலாம். இதனால் தலை குளிர்ச்சியாவதுடன் தலைமுடி பிரச்சினை சரியாகும். சளித்தொல்லை, சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் வெயில் காலத்தில் இதைச் செய்யலாம். இதை ஒழுங்காகப் பின்பற்றினால் தலையில் வரக்கூடிய பொடுகு காணாமல்போய்விடும். அதுமட்டுமல்லாமல் புழுவெட்டு, பூச்சி வெட்டு, சொட்டை எல்லாமே சரியாகிவிடும்.

வழுக்கை, முடிஉதிர்தல் போக்கும் எளிய மூலிகைகள்!

அறுகம்புல்:
அறுகம்புல்லை மையாக அரைத்து தலையில் பூசிக்குளிக்கலாம். இன்னொருநாள் அறுகம்புல்லை காயவைத்துப் பொடியாக்கி தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இரவில் திரிபலா சூரணத்தை தேன் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாவதுடன் உடல் சூடு குறைந்து தலைமுடி பிரச்சினைகள் சரியாகும். இந்த வழிமுறைகள் 48 நாள் பின்பற்றலாம். அதன்பிறகு வாரம் ஒருநாள் செய்து வந்தால் நல்லது.

தலைமுடி பிரச்சினைக்கு மூல காரணமான பொடுகுத்தொல்லையை சரிசெய்ய வேண்டியது அவசியம். சின்ன வெங்காயத்தை மையாக அரைத்து அதனுடன் நாட்டுக்கோழி முட்டையின் வெள்ளைக்கருவைச் சேர்த்து ஆம்லெட்டுக்கு அடிப்பதுபோல் அடித்து எடுத்து தலையில் தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். முட்டை நாற்றம் போவதற்கு சீயக்காய் தேய்த்துக் குளிக்கலாம். வாரத்தில் ஒன்று இல்லையென்றால் இரண்டுநாள் செய்து வந்தால் பொடுகுப்பிரச்சினை சரியாகும்.

வழுக்கை, முடிஉதிர்தல் போக்கும் எளிய மூலிகைகள்!

வெந்தயம்:
வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்கலாம். வெந்தயத்தை சோற்றுக்கற்றாழையில் இரண்டுநாள் ஊற வைத்து முளைக்கட்டி காய வைத்துப் பொடியாக்க வேண்டும். அதை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலைக்குத் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும். அதேபோல் வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடலாம். இந்தக்கீரையை மையாக அரைத்து தலையில் தேய்த்தும் குளிக்கலாம். நெல்லிக்காய் சாப்பிடலாம். கறிவேப்பிலை, இஞ்சியுடன் நெல்லிக்காய் சேர்த்து அரைத்து கொஞ்சம் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்துக் குடிக்கலாம்.

அடுத்தது ஒரு எளிமையான குளியல் பற்றிப் பார்ப்போம். முதல்நாள் இரவு கைப்பிடி வேப்பிலையை தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து மறுநாள் காலையில் குளிக்கும்போது அந்தத் தண்ணீரை கடைசியாக தலையில் ஊற்றி அலசவேண்டும். இல்லையென்றால் காலையில் எழுந்ததும் ஒரு வாளியில் நீர் ஊற்றி அதில் வேப்பிலையைப் போட்டு வெயிலில் வைக்க வேண்டும். சிறிதுநேரம் கழித்து அந்த நீரால் தலைக்குக் குளிக்கலாம். இதுபோல் செய்துவந்தால் பேன் தொல்லை, ஈறு, செம்பட்டை முடி, சொட்டை, வழுக்கை, புழுவெட்டு, பூச்சி அரிப்பு என எல்லா பிரச்சினைகளும் சரியாகும்.

தானியங்கள்:
இதுமட்டுமல்லாமல் கேரட், பச்சைப்பட்டாணி, தேங்காய் போன்ற உணவுப்பொருள்களை பச்சையாக சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை, பேரீச்சம்பழம், மணத்தக்காளிக்கீரை, அவரைக்காய், தக்காளி, மீன், முட்டை, முந்திரி, பாதாம், கம்பு, கேழ்வரகு, சோளம் போன்றவற்றைச் சாப்பிட்டு வருவது நல்லது.