வைட்டமின் டி பற்றாக்குறையால் இதெல்லாம் ஏற்படலாம்!

 

வைட்டமின் டி பற்றாக்குறையால் இதெல்லாம் ஏற்படலாம்!

சூரியன் மனிதர்களுக்கு கொடுக்கும் வரங்களுள் ஒன்று வைட்டமின் டி. மேற்கத்திய நாடுகளில் வெயில் குறைவு என்பதால் அங்கு வைட்டமின் டி பற்றாக்குறை என்பது சர்வ சாதாரணம். ஆனால், இவ்வளவு வெப்பம் மிகுந்த இந்திய நாட்டில் வாழ்ந்தாலும் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மற்ற வைட்டமின்களைப் போல அல்லாமல், ஹார்மோன் உற்பத்தி, செயல் திறன் என உடலின் ஒவ்வொரு செல்லுடனும் தொடர்புடையது வைட்டமின் டி.

வைட்டமின் டி பற்றாக்குறையால் இதெல்லாம் ஏற்படலாம்!

சூரிய ஒளி நம் மீது படும்போது நம் சருமத்தில் உள்ள கொலஸ்டிராலில் இருந்து நம்முடைய சருமமே வைட்டமின் டி-யை உற்பத்தி செய்கிறது. கடல் உணவு, எண்ணெய் சத்து நிறைந்த மீன் என மிகக் குறைந்த உணவுகளில்தான் வைட்டமின் டி இருக்கிறது. மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 400 முதல் 800 இன்டர்நேஷனல் யூனிட் என்ற அளவுக்கு வைட்டமின் டி தேவை.

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பவர்கள், வயதானவர்கள், உடல் பருமனானவர்கள், மீன் போன்ற கடல் உணவை உட்கொள்ளாதவர்கள், சூரிய ஒளி குறைவான பகுதியைச் சேர்ந்தவர்கள், தொடர்ந்து சன்ஸ்கிரீன் பயன்படுத்துபவர்களுக்கு வைட்டமின் டி உற்பத்தி மிகக் குறைவாகவே இருக்கும்.

வைட்டமின் டி பற்றாக்குறை இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்படும். சாதாரண தொற்று நோய்கள் அடிக்கடி தொற்றிக்கொள்ளும். இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் வைட்டமின் டி முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் பற்றாக்குறை காரணமாக நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் ஆகிறது. இதன் காரணமாகவே நோய்த் தொற்று ஏற்படுகிறது.

வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக ரத்த உற்பத்தி குறைகிறது. ரத்தம் குறைவதால் சோர்வு, மனக் கவலை போன்றவை ஏற்படுகின்றன. குறிப்பாக பெண்களுக்கு பகல் நேரத்தில் அதீத சோர்வு, தலைவலி இருந்தால் அவர்கள் வைட்டமின் டி அளவை பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

எலும்பு மற்றும் முதுகுவலி வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. கால்சியத்தை கிரகிக்க வைட்டமின் டி தேவைப்படுகிறது. கால்சியம் பற்றாக்குறை காரணமாக எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் கிடைப்பதில் தடை ஏற்படுகிறது. இந்த நிலை தொடரும்போது எலும்பு அடர்த்தி குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

புண்கள் ஆறுவதற்கு நாள் ஆனால் சர்க்கரை நோய் இருக்கலாம் என்று சந்தேகிப்பது வழக்கம். வைட்டமின் டி பற்றாக்குறை கூட புண்கள் ஆறாமல் இருக்க காரணமாக இருக்கலாம். காயம் ஏற்பட்ட இடத்தில் புதிய செல்கள் உருவாக வைட்டமின் டி தேவைப்படுகிறது. இது தவிர வீக்கத்தை தடுக்க, கிருமிகளுக்கு எதிராக போராட வைட்டமின் டி தேவை. இதன் பற்றாக்குறை காரணமாக புண்கள் ஆற நாள் ஆகிறது.

முடிவு உதிர்வு அதிகமாக இருந்தால் அது வைட்டமின் டி பற்றாக்குறையால் கூட இருக்கலாம். தசை வலி, எலும்பு அடர்த்தி குறைவது போன்றவையும் வைட்டமின் டி பற்றாக்குறையின் அறிகுறியாக இருக்கலாம். இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக செயல்படவும் வைட்டமின் டி தேவைப்படுகிறது. எனவே, போதுமான அளவு வைட்டமின் டி கிடைப்பதை உறுதி செய்துகொள்வது நல்லது.