உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால் வரக்கூடிய 5 நோய்கள்!

 

உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால் வரக்கூடிய 5 நோய்கள்!

சுறுசுறுப்பாக காலையில் எழுந்து வயலுக்கு வேலைக்கு சென்ற காலத்தில் சர்க்கரை நோய், இதய நோய் பெரிய அளவில் இல்லை. ஊரில் ஒரு சிலருக்கு வருவதால், பணக்காரர்கள் வியாதி என்று அழைக்கப்பட்டது. இன்றைக்கு வாழ்வியல் மாற்றம் காரணமாக சின்ன சின்ன இளைஞர்களுக்கு கூட சர்க்கரை நோய் வந்துவிடுகிறது. உடல் உழைப்பு குறைவு, அதிக அளவில் கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாமை, மது, சிகரெட் பழக்கம் என நாம் செய்யும் தவறுகள் நம் உடல் நலத்துக்கு வேட்டு வைத்துவிடுகின்றன.

உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறையால் வரக்கூடிய 5 நோய்கள்!

உடல் உழைப்பு இன்றி, ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு வரக்கூடிய ஐந்து உடல் நல பாதிப்புகள் பற்றி பார்ப்போம்!

உடல் உழைப்பு குறைவதால் அதிகப்படியான கலோரிகள் கொழுப்பாக மாற்றப்பட்டு வயிறு, தொடை, இடுப்பு என உடலின் பல பகுதிகளில் சேமிக்கப்படுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமன் அழகு சார்ந்த விஷயம் இல்லை. இதய நோய், சர்க்கரை நோய் எனப் பல பிரச்னைகளுக்கு இது காரணமாகி விடுகிறது.

உடல் உழைப்பு குறைவு காரணமாக உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கிறது. இதனால் இன்சுலின் செயல்திறன் குறைய ஆரம்பிக்கிறது. ஒரு கட்டத்தில் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் நிலை வந்துவிடுகிறது. இந்தியாவில் சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டால் கண் தொடங்கி, பாதம் வரை பல்வேறு பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

உடல் உழைப்பு குறைந்தவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் பிரச்னை ஏற்படும். உடல் உழைப்பு குறைவால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்களின் சுற்றளவு குறைகிறது. ரத்த ஓட்டம் குறைவதுடன், ரத்த நாளங்களின் விரிந்துகொடுத்து பழைய நிலைக்கு திரும்பும் தன்மை பாதிப்படைகிறது. இதன் காரணமாக ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து இதய நோயும் வந்துவிடும். ரத்த நாளத்தில் கொழுப்பு படிவதால் அதன் சுற்றளவு குறைந்துவிடுகிறது. இதனால் உடல் உறுப்புகளுக்கு போதுமான அளவு ரத்தம் சென்று சேருவது தடைபடுகிறது. இந்த சூழலை எதிர்கொள்ள இதயம் கூடுதலாக வேலை செய்ய வேண்டி வருகிறது. இதனால் மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படும். ரத்த நாளங்கள் அளவு குறைதல், ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்றவை மூளை ரத்த நாளங்களில் விரிசல், வெடிப்பை ஏற்படுத்திவிடலாம். மூளைக்கு போதுமான அளவு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என்றால் அவை இறக்க ஆரம்பித்துவிடும். இதனால் பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம்.