கிராமப்புற கோவில்கள் திறப்பு! – பக்தர்கள் சிறப்பு வழிபாடு

 

கிராமப்புற கோவில்கள் திறப்பு! – பக்தர்கள் சிறப்பு வழிபாடு

சென்னை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் கிராமப் பகுதிகளில் உள்ள கோவில்கள் இன்று திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சிறப்பு சாமி தரிசனம் செய்தனர்.

கிராமப்புற கோவில்கள் திறப்பு! – பக்தர்கள் சிறப்பு வழிபாடுதமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கிராமப்புற பகுதிகளில் உள்ள கோவில்களை மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதி கோவில்களுக்கு இது பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்குத் தீர்த்தம், திருநீறு, பிரசாதம் என எதுவும் அளிக்கக் கூடாது என்று பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தேங்காய், பழம், பூ உள்ளிட்டவை சாமிக்கு படைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாமிக்கு அபிஷேகம் செய்யும்போது பக்தர்கள் யாரும் அமர்ந்து பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு கிராமப்புறப் பகுதிகளில் உள்ள அனைத்து இந்து கோவில்கள், மசூதிகள், தர்கா, கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் பொருந்தும். சென்னை உள்ளிட்ட இதர ஐந்து மாவட்டங்களில் பஞ்சாயத்து பகுதிகளில் ஜூலை 6ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
100 நாட்களுக்குப் பிறகு இன்று சிறு கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். காலையிலேயே கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்று நகர்புறங்களில் உள்ள முக்கியமான கோவில்களையும் அரசு திறக்க அனுமதிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.