அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி… முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

 

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி… முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

திருச்சி

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி அதிமுக நிர்வாகியிடம் ரூ.8 லட்சம் பணம் பெற்றுகொண்டு மோசடி செய்ததாக, அதிமுக முன்னாள் எம்எல்ஏ பூவை செழியன் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருச்சி மாவட்டம் வையம்பட்டி ஒன்றியம் செட்டியபட்டி ஊராட்சியை சேர்ந்தவர் சின்னசாமி. இவர் அதிமுக கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி மின்னல் கொடி. இவர் 2016ஆம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டவர். இந்த நிலையில், இவர்களது மகன் மற்றும் உறவினர்களின் மகன்களுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, அதிமுகவின் பெரம்பலூர் மாவட்ட பொருளாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பூவைசெழியன், 2018ஆம் ஆண்டு 8 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் மோசடி… முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

ஆனால் உறுதியளித்தவாறு அரசு வேலை வாங்கி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால், சின்னசாமி பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால், பூவை செழியன் பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனை அடுத்து, சின்னசாமி சென்னை சென்று முதல்வர் வீட்டின் முன் தீக்குளிக்க முயன்றுள்ளார். இந்த சம்பவம் குறித்து சென்னையில் இருந்து மணப்பாறை டி.எஸ்.பி-க்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், மணப்பாறை டி.எஸ்.பி பிருந்தா, பூவைசெழியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில், சின்னசாமி அளித்த புகாரின் பேரில் தற்போது பூவைசெழியன் மீது 3 வழக்குகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் பெரம்பலூர் மாவட்ட அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.