திருவள்ளூருக்கு காரில் கடத்திய ரூ.40 லட்சம் குட்கா பறிமுதல்

 

திருவள்ளூருக்கு காரில் கடத்திய ரூ.40 லட்சம் குட்கா பறிமுதல்

திருவள்ளூர்

பெங்களூரில் இருந்து திருவள்ளூருக்கு காரில் கடத்திவரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெங்களூருவில் இருந்து திருவள்ளூருக்கு சட்ட விரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக, ஊத்துக்கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி தலைமையிலான போலீசார் ஊத்துக்கோட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளூருக்கு காரில் கடத்திய ரூ.40 லட்சம் குட்கா பறிமுதல்

அப்போது, பாலாஜி நகர் பகுதியில் சாலையில் சந்தேகத்திற்கு உரிய விதமாக நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த 2 கார்களை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது காரின் உள்ளே மூட்டை மூட்டையாக குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் 2 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தானை சேர்ந்த சத்ராராம் மற்றும் அவரது சகோதரர் துக்காராம் ஆகியோரை கைதுசெய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் கடை நடத்தி வருவதும், அங்கு வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரும் குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.