`ஒருவர் மீது 10 வழக்கு; மற்றொருவர் மீது 35 வழக்குக!’- பாஜகவில் ஐக்கியமாகிய பிரபல ரவுடிகள்

 

`ஒருவர் மீது 10 வழக்கு; மற்றொருவர் மீது 35 வழக்குக!’- பாஜகவில் ஐக்கியமாகிய பிரபல ரவுடிகள்

சென்னையை சேர்ந்த பிரபல ரவுடிகள் கல்வெட்டு ரவி, சத்யா, சேலத்தை சேர்ந்த முரளி ஆகியோர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேலையில் கட்சியை பலப்படுத்த பாஜக முயன்று வருகிறது. அந்த வகையில் திமுக துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி பாஜகவில் அண்மையில் இணைந்தார். மேலும் திமுகவை சேர்ந்த எம்எல்ஏ கு.க.செல்வம், திடீரென பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது கடும் விமர்சனம் வைத்தார். இதையடுத்து, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவர் இன்று, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது எம்எல்ஏ பதவியை பறிக்க திமுக தலைமை முயன்று வருகிறது.

பாஜகவில் ஐக்கியமான வி.பி.துரைசாமிக்கு மாநில பாஜக துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. ஊழல்வாதிகள், குற்றவாளிகள் ஆகியோருக்கு தேர்தலில் இடம் அளிக்க கூடாது என்ற பேச்சு எழுந்துவரும்நிலையில், கட்சியில் யார் வந்தாலும் சேர்த்து கொள்கிறது தமிழக பாஜக. அந்த வகையில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த வட சென்னையைச் சேர்ந்த கல்வெட்டு ரவி என்ற பிரபல ரவுடி பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். ரவியுடன் சேர்ந்து சத்யா என்ற சத்தியராஜ் என்ற மற்றொரு ரவுடியும் பாஜகவில் இணைந்திருக்கிறார். 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கல்வெட்டு ரவி மீது 6 படுகொலைகள் உள்ளிட்ட 35 வழக்குகள் உள்ளது.

காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ரவுடிகளின் பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவில் இருப்பவர்தான் பாஜகவில் இணைந்த கல்வெட்டு ரவி. ஆகையால் காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக பாஜகவில் அடைக்கலமாகியிருக்கிறார் ரவுடி ரவி.

`ஒருவர் மீது 10 வழக்கு; மற்றொருவர் மீது 35 வழக்குக!’- பாஜகவில் ஐக்கியமாகிய பிரபல ரவுடிகள்

அதேபோல, ரவுடி சத்யா மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளது. 2 முறை குண்டர் சட்டத்தில் கைதாக ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் தற்போது வட சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும் பாஜக பிரமுகர் மூலம் அக்கட்சியில் இணைந்துள்ளார்கள்.

முன்னதாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஏராளமான காவல்நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி முரளி என்கிற முரளிதரனுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணியில் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது கட்டுக்கட்டாக செல்லாத ரூபாய் நோட்டுகளுடன் வசமாக சிக்கிய பாஜகவைச் சேர்ந்த அருண் அந்த சமயத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, அதே கட்சியில் மாநில இளைஞரணி செயலாளராக அண்மையில் பதவியேற்றுள்ளார். அதேபோல, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடி முரளி பல்வேறு கொலை, கொள்ளை போன்ற குற்றச்செயல்களை புரிந்து 5 முறை குண்டர் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டவர்.

அந்த ரவுடிக்கு தற்போது சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணியில் பதவி வழங்கியுள்ளது தமிழக பாஜக. இந்த பதவி வழங்கல் நிகழ்வு அக்கட்சி உறுப்பினர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதோடு, ரவுடி முரளிக்கு கட்சி பதவி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு ரவுடிகள், மோசடி பேர்வழிகளை கட்சியில் இணைத்து மக்களிடையே தன் செல்வாக்கை வெளிப்படுத்திக் கொள்ளவே இவ்வாறான இழி செயல்களில் ஈடுபட்டு தன் கட்சி உறுப்பினர்களிடையேவும் தமிழக பாஜக கெட்ட பெயர்களை பெற்று வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது.