‘ரீவைண்ட் 2020’ : இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

 

‘ரீவைண்ட் 2020’ : இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

ஆண்டுதோறும் அதிக படங்கள் ரிலீஸாகும் மாநிலங்களுள் தமிழமும் ஒன்று. மாதத்திற்கு குறைந்தது 4 படங்கள் ரிலீசாகி தியேட்டர்கள் களைகட்டும். ஆனால், இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியது. கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஊரடங்கிலேயே சென்று விட்டதால், படங்கள் ஓடிடியில் ரிலீஸாகும் நிலைக்கு தள்ளப்பட்டன. இன்னும் சில படங்கள் ரிலீஸ் ஆகாமலேயே கிடப்பில் இருக்கின்றன. விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே இந்த ஆண்டு தமிழ் திரைப்படங்கள் ரிலீஸாகி இருக்கும் நிலையில், அதன் விவரங்களை இந்த செய்திக் குறிப்பில் பார்க்கலாம்..

தர்பார்:

‘ரீவைண்ட் 2020’ : இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

ஆண்டு தொடக்கத்தில் முதலில் ரிலீஸான படமே தலைவர் படம் தான். பெரும்பாலும் பொங்கலுக்கு பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸாகும் நிலையில், இந்த முறை ‘சூப்பர் ஸ்டார்’ படம் ரிலீஸானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர். தியேட்டர்களில் கூட்டம் களைகட்டியது. ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் முருகதாஸ் கூட்டணியில் அதிரடியாக களமிறங்கிய இந்த படம், ரஜினி ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது.

போதை மாஃபியாவை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ‘அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது’ என்பதை கமிஷனர் வேடத்தில் ரஜினி எடுத்துச் சொல்லியது முதல் நயன்தாராவுடனான காதல், தந்தை பாசம், சண்டைக் காட்சிகள் என எல்லாமே ரசிக்கும் படியாக அமைந்தது. காஸ்டியூமில் இருந்து ஆக்டிங் வரை எல்லாமே வேற லெவல் என ரசிகர்கள் கொண்டாடினர்.

சைக்கோ:

‘ரீவைண்ட் 2020’ : இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் வெளியான இந்த படம் மக்கள் கவனத்தை ஈர்த்தது. இதுவரை உதயநிதி நடித்த படங்களுள் ‘இது தான் பெஸ்ட்’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு இருந்தது. பள்ளிப் பருவத்தில் தனது ஆசிரியை செய்த ஒரு செயலால் சைக்கோவாக ராஜ்குமார் பிச்சுமணி மாறியதும், பெண்களை குறிவைத்துக் கடத்தி கொடூரமாக கொலை செய்ததும் பார்வையாளர்களை மிரளச் செய்தது.

சைக்கோவிடம் சிக்கிய தனது காதலியை, பார்வையற்றவராக இருந்து உதயநிதி மீட்பதும், அந்த நபர் சைக்கோவாக மாறியது ஏன்? அந்த சூழலுக்கு தள்ளப்பட்டதன் காரணம் என்ன? என மற்றொரு கோணத்தில் பார்வையாளரை மிஷ்கின் யோசிக்கச் செய்ததும் இந்த படத்தின் தனி சிறப்பு. பொதுவாக சைக்கோக்கள் மீதான மக்களின் புரிதலை மாற்றி, அதன் பின்னணி குறித்து ஆழமாக சிந்திக்க வைக்கும் மிஷ்கினின் ‘சைக்கோ’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஓ மை கடவுளே:

‘ரீவைண்ட் 2020’ : இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

இந்த வருடம் வெளியான செம்ம ஹிட் திரைப்படங்களுள் ‘ஓ மை கடவுளே’- உம் ஒன்று. காதலர் தினத்தன்று வெளியான இந்த படம், பார்வையாளர்களை ‘வாவ்’ என மெய் மறந்து ரசிக்கச் செய்தது. இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனி பாராட்டுக்கள். பெஸ்டீக்களாக இருக்கும் ரித்திகா சிங் மற்றும் அசோக் செல்வனுக்குள்ளே எப்படி காதல் மலருகிறது என்பதை அற்புதமாக விளக்குவது தான் இந்த படத்தின் கான்சப்ட். இதுவரை கண்டிராத ஒரு புது விதமான கதை, திருமண வாழ்க்கையின் எதார்த்தம் போன்றவற்றை அசால்ட்டாக எடுத்துச் சொல்லி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்:

‘ரீவைண்ட் 2020’ : இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

மக்கள் மனதை கொள்ளையடித்த படங்களுள் இதுவும் ஒன்று. காதலர்களுக்குள்ளேயே திருட்டு நடந்தால் என்ன நடக்கும் என்பது தான் கதையின் சுருக்கம். தற்போதைய காலக்கட்டத்தில் ஆன்லைனில் நடக்கும் மோசடிகளை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கும் இந்த படத்தில், ஆண்களுக்கு நிகராக பெண்களும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் தேசிங் பெரியசாமி. தமிழ் திரைப்படங்களில் அவ்வளவாக நடிக்காத துல்கர் சல்மான், ரக்சன், ரித்து உள்ளிட்டோரை வைத்து ஒரு விறுவிறுப்பான கதையாக அமைந்த இந்த படம் சூப்பர் ஹிட்.

கன்னி மாடம்:

‘ரீவைண்ட் 2020’ : இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

போஸ் வெங்கட் இயக்கத்தில் புது முக நடிகர்களான ஸ்ரீராம், சாயதேவி, விஷ்ணு நடிப்பில் உருவாக்கப்பட்டது ’கன்னிமாடம்’. என்ன தான் காலம் முன்னேறி இருந்தாலும், ஆணவக் கொலைகளும், காதல் திருமண எதிர்ப்புகளும் ஆங்காங்கே நடந்து கொண்டு தான் இருக்கிறது என்பதை ஆழமாக உணர்த்தியது இந்த படம். சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்து கொள்ளும் காதல் ஜோடிகள் உறவினர்களால் படும் பாட்டை , அற்புதமாக படமாக்கியிருக்கிறார் போஸ் வெங்கட். காதல் திருமணம் செய்ய விரும்பும் ஜோடிகள் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக் கூடாது என்பதை தெளிவாகவும் விறுவிறுப்பாக எடுத்துச் சொல்லிய இந்த படம் பாராட்டை பெற்றது.

பொன்மகள் வந்தாள்:

‘ரீவைண்ட் 2020’ : இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

கொரோனா அச்சுறுத்தலால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், ஓடிடியில் ரிலீஸான முதல் தமிழ் படம் இது. அதற்கே ஒரு தனி பாராட்டுக்கள். சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடூரங்களை மையமாகக் கொண்ட இந்த படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணாக மாறி ஜோதிகா, தனது தாயின் பெயரைக் காப்பாற்ற போராடும் உருக்கவைக்கும் படம் பொன்மகள் வந்தாள். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என பெண் குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்பதற்கு முன்னர், ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுங்கள் என்பதை நெற்றிப் போட்டி அறைந்தார் போல எடுத்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஃப்ரெட்ரிக். மேலும், படத்தின் வசனங்களும் நல்ல வரவேற்பை பெற்றது.

சூரரைப் போற்று:

‘ரீவைண்ட் 2020’ : இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களை கவர வைக்க முடியும் என்பதை உணர்த்தியது ‘சூரரைப் போற்று’ திரைப்படம். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்றளவும் பேசப்படுகிறது. ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒருவர் எப்படி விமான நிறுவனத்தை ஆரம்பிக்கிறார் என்பதை உணர்த்தும் கதையாகவும், ஒரு பெண்ணுக்கு சுயமரியாதையும் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படமாகவும் அமைந்திருந்தது. சூர்யா நடிப்பிற்கு ஈடாக “பொம்மி” கதாபாத்திரத்தில் அபர்ணா முரளி நடித்திருந்தார். ” **தா தாம்பரத்துல இறக்குடா”, ” வானம் என்ன உங்கப்பன் வீட்டு சொத்தா” போன்ற இந்த படத்தின் வசனங்கள் சூரரைப் போற்று படத்தை வானுயரத்தில் பறக்கச் செய்தது.

மூக்குத்தி அம்மன்:

‘ரீவைண்ட் 2020’ : இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?

நயன்தாரா படம் ரிலீஸ் ஆகலன்னா எப்படி?. ஆர்.ஜே பாலாஜி உருவான மூக்குத்தி அம்மன் திரைப்படம் பேராதரவை பெற்றது என்றே சொல்ல வேண்டும். நாட்டில் பெண்கள் படும் கஷ்டங்களை எடுத்துச் சொல்லி அற்புதமாக ஆர்.ஜே பாலாஜி இயக்கியிருந்த நிலையில், மக்களை ஏமாற்றி அபேஸ் செய்யும் போலி சாமியார்கள் மீது வேல் கொண்டு பாய்ச்சும் அம்மனாக காட்சியளித்தார் நயன்தாரா. காடுகள் ஆக்கிரமிப்பு, கார்ப்பரேட் ஊழல் போன்றவற்றை கதைக்களத்தில் கொண்டு வந்து சிந்திக்க செய்தார் ஆர்.ஜே பாலாஜி. ஆக மொத்தத்தில் போலி சாமியார்களின் முகத்திரையை கிழிக்கும் படமாக அமைந்தது மூக்குத்தி அம்மன்.

இந்த ஆண்டில் வெளியானது ஒரு சில இடங்களே என்றாலும் ஆழமான கருத்தக்களையும் தெளிவான சிந்தனைகளையும் மக்கள் மனதில் ஆழப் பதித்தது என்பது கவனிக்கதிதக்கது.