ஆகஸ்ட் 28ல் விடுதலை?- மீண்டும் பரபரப்பில் சசிகலா விவகாரம்

 

ஆகஸ்ட் 28ல் விடுதலை?- மீண்டும் பரபரப்பில் சசிகலா விவகாரம்

பெங்களூரு சிறையில் இருந்து ஆகஸ்ட் 28ம் தேதி சசிகலா விடுதலையாவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஜனவரியில்தான் அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்கிறது இன்னொரு தகவல்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் 4 பேரையும் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் உள்ளிட்ட தீர்ப்பை உறுதி செய்தது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்ததால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில், லஞ்சம் கொடுத்து சிறையில் சசிகலா சொகுசாக வாழ்வதாகவும், வெளியே சென்று ஷாப்பிங் செய்து வருவதாகவும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு சிறிது நாட்களே நீடித்தது.

இதனிடையே, கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த போதும், அவர் உயிரிழந்த போதும் சசிகலா பரோலில் வெளியே வந்து மீண்டும் சிறைக்கு சென்றார். இந்த நிலையில், நன்னடத்தை விதிகளின்படி சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன்பாகவே சிறையில் இருந்து வெளியே கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இதை பெங்களூரு சிறை நிர்வாகம் மறுத்தது. சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்றும் தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என்றும் கர்நாடக சிறைத்துறை இயக்குநராக இருந்த என்.எஸ்.மெகரிக் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கர்நாடக சிறைத் துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தார் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர். அதற்கு பதிலளித்த கர்நாடக சிறைத்துறை “ஒரு கைதியின் விடுதலை என்பது பல்வேறு சட்ட விதிகளை வைத்துத்தான் கணக்கிட முடியும். சசிகலா போன்ற குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராத தொகையைச் செலுத்தியது உள்ளிட்டவற்றை வைத்து விடுதலை தேதி மாற்றி அமைக்கப்படும். இதன் காரணமாக இப்போதைய நேரத்தில் இந்த தகவலை நாங்கள் வெளியிட முடியாது” என்று தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 14ஆம் தேதி சசிகலா விடுதலையாவார் என தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கர்நாடக சிறைத்துறை முற்றுப்புள்ளி வைத்தது. இதனிடையே, வரும் 28ம் தேதி சசிகலா விடுதலையாகிறார் என்று கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு இ-மெயில் ஒன்று வந்ததாகவும் கர்நாடக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால்தான் அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சை கிளம்பியது. உடனடியாக ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிக்கைவிட்டனர். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக யாரும் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்றும் மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தனர்.

அதே நேரத்தில் சசிகலா தற்போது வெளியே வர வாய்ப்பில்லை. அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மகளின் திருமணம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. அந்த நேரத்தில்தான் சசிகலா வெளியே வருவார் என்கிறது மன்னார்குடி வட்டாரம். சிறையில் இருந்து அவர் வெளியே வந்தவுடன் அரசியல் களத்தில் இறங்க மாட்டார். மவுனமாகவே இருந்து அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் காய் நகர்த்துவார். கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்கள், அமைச்சர்கள் மூலம் இதனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. எனது என்னவோ, சசிகலா விடுதலை புரியாத புதிராக இருந்து வருகிறது.