குற்றமற்றவர்கள் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டது இதயத்தில் இறங்கிய இடி!- வைரமுத்து

 

குற்றமற்றவர்கள் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டது இதயத்தில் இறங்கிய இடி!- வைரமுத்து

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். இவர் கடந்த 20 ஆம் தேதி முழு பொதுமுடக்கம் நடைமுறைகளை மீறி நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக தெரிகிறது. இதனால் சாத்தான்குளம் போலீசார் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனும், ரகுகணேஷ் ஆகிய இருவரும் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் கடுமையாகத் தாக்கியதுடன், போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். இதையடுத்து காயம் காரணமாக ஜெயராஜ் மருத்துவச் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்த பென்னிக்ஸ் உயிரிழக்க, ஜெயராஜ் மருத்துவமனையில் பலியானார். போலீசாரின் தாக்குதலால் தான் இரண்டு உயிரிழப்புகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “குற்றவாளிகளுக்கே கூட மரண தண்டனை கூடாது என்று குரல் எழுப்பும் கால கட்டத்தில் சாத்தான் குளத்தில் குற்றமற்றவர்கள் மரணத்திற்கு உள்ளாக்கப்பட்டது. ஒவ்வோர் இதயத்திலும் இறங்கிய இடியல்லவா? அறத்தின் வினாவுக்கு நீதி விடைசொல்ல வேண்டும். #சாத்தான்குளம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.