சிரஞ்சீவி பட்டம் பெற்று இன்றும் வாழும் 7 பேர்!

 

சிரஞ்சீவி பட்டம் பெற்று இன்றும் வாழும் 7 பேர்!

சிரஞ்சீவியாக வாழ்க என்று வாழ்த்துவார்கள். அப்படி என்றால் என்றென்றைக்கும், மரணமின்றி வாழ் என்று அர்த்தம். மனிதனாக பிறந்தால் ஒவ்வொருவரும் உயிரிழந்தே ஆக வேண்டும். ஆனால், நம்முடைய இந்து மதத்தில் ஏழு பேர் இன்றும் சிரஞ்சீவிகளாக வாழ்ந்து வருவதாக நம்பிக்கை உள்ளது. யார் அவர்கள் என்று பார்ப்போம்.

சிரஞ்சீவி பட்டம் பெற்று இன்றும் வாழும் 7 பேர்!

அனுமன்: எந்த எதிர்பார்ப்புமின்றி ராம தொண்டே தன் பிறவி கடன் என வாழ்ந்தவர் ஆஞ்சநேயர். ராமரால் சிரஞ்சீவி பட்டம் அனுமனுக்கு வழங்கப்பட்டது. ராமாயணம் மட்டுமின்றி, மஹாபாரதத்திலும் அனுமன் வருவதைப் பார்க்கலாம். இன்றளவும் அவர் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். எங்கெல்லாம் ராமநாமம் சொல்லப்படுகிறதோ அங்கு அனுமன் இருப்பார் என்பது நம்பிக்கை.

வியாசர்: வியாசர் சொல்ல சொல்ல விநாயகர் எழுதியது மகாபாரதம். படிப்போரின் பாவங்களைப் போக்கும் மகாபாரதம் படைத்த வியாசர் என்றென்றும் சிரஞ்சீவியா வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

விபீஷணன்: ராவணனின் தப்பியும், இலங்கையை ஆட்சி செய்தவருமான விபீஷணனும் சிரஞ்சீவிதான். அண்ணன் என்றாலும் அதர்மத்தின் பக்கம் நிற்காமல், ராமருடன் நியாயத்தின் பக்கம் நின்றதால் அவர் சிரஞ்சீவி பட்டம் பெற்றார்.

மகாபலி: அசுரக் குலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்தவர் மகாபலி. அதனால் தங்கள் தேவர் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று தேவர்கள் அஞ்சினர். வாமன அவதாரத்தின் மூலம் மகாபலியை அழித்து பாதாள உலகத்துக்கு அவரை அனுப்பினார் விஷ்ணு. அவரும் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். ஆண்டுக்கு ஒரு முறை தன்னுடைய நாட்டு மக்களை சந்திக்க அவர் வருகிறார். அதையே கேரள மக்கள் ஓணம் என்று கொண்டாடுகின்றனர்.

பரசுராமர்: பீஷ்மர், துரோணச்சாரியார், கர்ணன் ஆகியோரின் குரு இவர். தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு இவரே எடுத்துக்காட்டு. தந்தை ஆணைக்குக் கட்டுப்பட்டு தன் பெற்ற தாயையே கொன்றார். மீண்டும் தவ வலிமையால் தாயை உயிர்ப்பித்தார். ராமாயணம், மகாபாரதம் என இரண்டு காவியங்களும் இவரை சிரஞ்சீவி என்று போற்றுகின்றன.

மார்க்கண்டேயன்: மிருகண்ட முனிவர் – மருத்துவதி ஆகியோ குழந்தைப் பேற்றுக்காக சிவனை நோக்கி தவம் இருந்ததின் பலனாக பிறந்தவர் மார்க்கண்டேயன். ஜோதிடர்கள் இவன் 16 வயதில் மரணம் அடைவான் என்று கணித்தனர். அதன்படி, 16வது வயதில் சிவபூஜை செய்த போது மார்க்கண்டேயனின் ஆயுளை முடித்து வைக்க எமன் பாசக்கயிற்றை வீசினார். அது சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. இதனால் வெகுண்டெழுந்த சிவன், எமனை எட்டி உதைத்தார். மேலும், மார்கண்டேயனுக்கு என்றும் 16 என்ற சிரஞ்சீவி பட்டத்தை வழங்கினார்.

அஸ்வத்தாமன்: மகாபாராதத்தில் வரும் துரோணாச்சாரியரின் மகன் அஸ்வத்தாமன். குருச்சேத்திரப் போரில் உயிர் பிழைத்த மூவரில் இவனும் ஒருவர். தன்னுடைய தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டது, நண்பன் துரியோதனன் அதர்ம வழியில் தாக்கப்பட்டதால் கோபம் கொண்ட அவன், பாண்டவர்களின் வம்சத்தை அழிப்பேன் என்று சபதம் ஏற்றுப் பாண்டவர்களின் புதல்வர்களை கொலை செய்தான். மேலும் பிரம்மாஸ்திரம் மூலமாக உத்தரயைின் கருவில் இருக்கும் குழந்தையைக் கொள்ள முயற்சி செய்தான். அதனால் அவனுக்கு சாவை விட கொடிய தண்டனையாக ஆறாத ரத்தம் வழிந்தோடும் காயங்களுடன் மரணமின்றி உலகை சுற்றி வரக் கூடிய தண்டனையை சாபமாக வழங்கினார் கிருஷ்ணன். அதனால் அவனும் சிரஞ்சீவியாக உலகைச் சுற்றி வருகிறான்.