ஆயுளை நீட்டிக்கும் சுதர்சன காயத்ரி மந்திரம்!

நீண்ட ஆயுளும் ஆரோக்கியமான வாழ்வும் வாழ விரும்பும் ஒவ்வொருவரும் சொல்ல வேண்டியது சுதர்சன காயத்ரி மந்திரமாகும். திருமால் தன்னுடைய கையில் வைத்திருக்கும் சக்கரத்தை சுதர்சன சக்கரம் என்று சொல்வோம். சுதர்சனரை சக்கரத்தாழ்வார் என்றும் சொல்வார்கள். தீமை செய்பவர்களை அழிப்பது சுதர்சன சக்கரத்தின் பணி. சுதர்சன காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வருவதன் மூலம் மனதில் உள்ள பயம் மறையும். ஆரோக்கிய வாழ்வு வாழலாம். இதன் மூலம் ஆயுள் நீடிக்கும். வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். வாழ்வின் இலக்கை அடைய இந்த மந்திரம் உதவி செய்யும்.
மந்திரம்:
‘ஓம் சுதர்ஹநாய வித்மஹே
மஹாஸ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்’
விளக்கம்:
மகா விஷ்ணுவின் கரங்களை அலங்கரிக்கும் சுதர்சனத்தை அறிந்து கொள்வோம். மிகப் பெரிய தீக் கொழுந்தாக திகழும் சுதர்சனர் மீது தியானம் செய்வோம். தீமையை அழிக்கும் அவர் நம்மைக் காத்து அருள்புரிவார்.
கோவில்களிலும் இல்லங்களிலும் இந்த மந்திரத்தை சொல்லலாம். சுதர்சன எந்திரத்தை வீட்டில் வைத்து வழிபடலாம். இந்த மந்திரத்தைத் தினமும் 3, 9, 11 அல்லது 108 முறை சொல்லி வருவது பலன் அளிக்கும். மந்திரத்தை வடக்கு அல்லது கிழக்கு முகமாக பார்த்துச் சொல்ல வேண்டும். தாமரை மலரைக் கொண்டு பூஜிக்க வேண்டும். எள்ளு உருண்டை அல்லது புளியோதரையை நைவேத்தியமாக வைத்து பூஜை செய்வது சிறப்பு.
இந்த மந்திரத்தைச் சொல்வதன் மூலம் நம்மைப் பிடித்த துஷ்ட சக்தி, எதிர்மறை ஆற்றல்கள் விலகும். பயம் நீங்கும். நம்பிக்கை அதிகரிக்கும். கடவுள் மீது பற்று அதிகரிக்கும். உடல் நலம், மன நலம் மேம்படும். ஆரோக்கியமான வாழ்வு, வளமான வாழ்வு, ஞானம் கிடைக்கும். கர்ப்பிணிகள் இதை சொல்லி வந்தால் பிறக்கப் போகும் குழந்தைக்கு மகா விஷ்ணுவின் ஆசிர் கிடைக்கும்.


