திருப்போரூர் அருகே பதுக்கப்பட்ட ஒன்றரை டன் குட்கா பறிமுதல்!

 

திருப்போரூர் அருகே பதுக்கப்பட்ட ஒன்றரை டன் குட்கா பறிமுதல்!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சமீப காலமாக தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தலும் பதுக்கல்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் குட்கா அதிகளவில் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம் கே.என் பேட்டையில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 டன் குட்காவும் வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் 50 மூட்டை குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து சென்னை அருகே திருநின்றவூரில் 329 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் கைதாகினர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒன்றரை டன் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருப்போரூர் அருகே பதுக்கப்பட்ட ஒன்றரை டன் குட்கா பறிமுதல்!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள தாழம்பூர் கீரப்பாக்கத்தில் இருக்கும் ஒரு வீடு மற்றும் குடோனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அங்கு திடீர் சோதனை செய்த போலீசார், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் குட்காவை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து குட்காவை பதுக்கி வைத்திருந்த பீர்முகமது, திவாகர் மற்றும் பாலமுருகன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட குட்கா மீண்டும் புழக்கத்துக்கு வருவதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.