நெகிழ்ச்சி அளிக்கிறது! காவலர்களை பாராட்டிய முதல்வர்…

 

நெகிழ்ச்சி அளிக்கிறது! காவலர்களை பாராட்டிய முதல்வர்…

புயல் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் சென்னைக் காவல்துறையினரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி உள்ளார்.

Image

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று இரவு காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் அருகே கரையைக்கடக்கவிருக்கிறாது. தற்போது புயலானது கடலூரில் இருந்து 110 கிமீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 120 கிமீ தொலைவிலும், சென்னையிருந்து 214 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. புயல் எதிரொலியால் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் ஏரிகள் நிரம்பிவழிகின்றன. இதனால் கரையோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும்பணியில் மீட்புப்படையினர் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

புயல் வெள்ளத்தில் சிக்கிய முதியோர்களுக்கு காவலர்கள் உதவும் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்ட சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால், “அவசரக்காலக்கட்டங்களில் களத்தில் நின்று பணிபுரியும் காவலர்களின் கடமைக்கு ஒரு சல்யூட் செலுத்துங்கள். காவலர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்” என பதிவிட்டிருந்தார். அவரது பதிவை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “நெகிழ்ச்சி அளிக்கிறது! ஆபத்துக் காலத்தில் உதவுபவனே உற்ற நண்பன் என்பார்கள். காவல்துறை உங்கள் நண்பன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ள சென்னை காவல்துறை நிர்வாகம் மற்றும் காவலர்களுக்கு எனது உளம்கனிந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். #Nivarpuyal” என பாராட்டியுள்ளார்.