நல்லவர்களை காக்க… கெட்டவர்களை அழிக்க… அம்பிகை பூஜை

 

நல்லவர்களை காக்க… கெட்டவர்களை அழிக்க… அம்பிகை பூஜை

பெண்மையின் கனிந்த நிலையே தாய்மை. சுயநலம் சிறிதும் இன்றி, தன் குடும்பம், குழந்தைகள் என்ற அன்பு உணர்வோடு பெற்ற தாய் இருப்பது போல, உலகம் என்னும் குடும்பத்தின் தாயாக இருப்பவள் அம்பிகை. அன்பு, கருணை, பொறுமை,தியாகம், சத்தியம், தர்மம் என எல்லா நற்குணங்களின் சேர்க்கையே அவள். பெண்ணுக்கே தைரியம் அதிகம். அதனால் காவல் தெய்வங்களாக காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன் என்னும் பெயர்களில் அம்பிகையை வழிபடுகிறோம். சுவாமியே இல்லாமல், அம்பாள் மட்டும் தனித்திருக்கும் கோவில்களும் நம் நாட்டில் நிறைய உள்ளன. அன்பே வடிவமானவள் அம்பிகை, கெட்டவர்களை அழித்து நல்லவர்களை காக்க சில தருணங்களில் சில இடங்களில் உக்ரமான திருக்கோலத்தில் காட்சி தருகிறாள்.

நல்லவர்களை காக்க… கெட்டவர்களை அழிக்க… அம்பிகை பூஜை

‘அதிசௌம்ய அதிரௌத்ராயை’ என்று அம்பிகையின் வைபவம் தேவி மஹாத்மியத்தில் துதிக்கப்படுகிறது. அம்பிகை அளவற்ற அன்பின் வடிவமாகத் திகழ்பவள். அவளே அளவற்ற கோபத்துடனும் விளங்குபவள் என்று வர்ணிக்கப் படுகிறாள். ‘தைத்யானாம் தேஹ நாசாய’ என்று, `கெட்டவர்களை அழிப்பதற்காக ஆயுதங்கள் தாங்கி இருப்பவளாக’ அம்பிகையைப் பற்றி விளக்குகின்றன சாஸ்திரங்களும் புராணங்களும்.

நல்லவர்களைக் காக்கவும் கெட்டவர்களை அழித்து தர்மத்தை நிலைநிறுத்தவும் தான் அவதரித்திருப்பதாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அருளியுள்ளார்.

காவலர்களிடம் உள்ள துப்பாக்கியைப் பார்த்தால் தவறு செய்பவர்கள் ஒதுங்கி ஓடுவார்கள். அதுபோல் வெளியுலகில் உள்ள அரக்கர்கள், கெட்டசக்திகள் மட்டுமின்றி, நம்முள் இருக்கும் தீய எண்ணங்களும், ஆயுதங்களுடன் உக்ர கோலத்தில் அருளும் அம்பிகையைத் தரிசிக்கும்போது, நம்மைவிட்டு விலகி நாம் நல்லவர்களாக மாற ஒரு வாய்ப்பு ஏற்படும்.

நமக்கு அருள்புரியும் தெய்வ சக்திகளின் திருமேனி ஒவ்வொன்றும் மிகப்பெரிய தத்துவார்த்தத்தை உள்ளடக்கித் திகழும். நாம் தீய வழியிலிருந்து விலகி, நல்ல வழியில் பயணம் செய்வதற்கு, மறக்கருணையோடு கூடிய அம்பிகையின் உக்ர திருக்கோலம் அருள்செய்யும்.

பலவாறாக உள்ள நம்முடைய கர்மவினைகளை அழிக்கக்கூடிய ஆற்றல் அம்பிகையின் திருக்கரங் களில் திகழும் ஆயுதங்களுக்கு உண்டு என்பதை உணர்ந்த நம்முடைய ரிஷிகளின் வழிகாட்டுதல் படி, நம் முன்னோர்கள் காட்டிய நெறியில் நம்முடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்வோம்.

நல்லவர்களை காக்க… கெட்டவர்களை அழிக்க… அம்பிகை பூஜை

தாயானவள், தன் குழந்தை நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மருத்துவரிடம் அழைத்துச்சென்று, அந்தக் குழந்தைக்குத் தடுப்பு மருந்துகளைப் பெற்றுத் தருவதுபோல், கருணையே வடிவான அம்பிகையும் நாம் நன்மை அடையவேண்டும் என்பதற்காகவே பல்வேறு உருவங்களில் பல்வேறு ஆயுதங்களுடன் காட்சி தந்து அருள்கிறாள் என்பது நம்பிக்கை.

-வித்யா ராஜா