அக இருளை அகற்றும் வடிவுடை அம்மன்

 

அக இருளை அகற்றும் வடிவுடை அம்மன்

ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய் நின்றாள்’ எனும் வரிகளுக்கேற்ப ஞானத்தின் சொரூபமாய் திருவொற்றியூரில் எழுந்தருளி உலக மக்களின் அஞ்ஞானத்தை நீக்குபவளாக இருக்கிறாள் வடிவுடையம்மன்.

’ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய் நின்றாள்’ எனும் வரிகளுக்கேற்ப ஞானத்தின் சொரூபமாய் திருவொற்றியூரில் எழுந்தருளி உலக மக்களின் அஞ்ஞானத்தை நீக்குபவளாக இருக்கிறாள் வடிவுடையம்மன்.

கடற்கரை சாலையில் பயணித்து கடைக்கோடியில் திரும்பி சென்றால், போக்குவரத்து நெரிசலும், துறைமுக பரபரப்புகளும், தொழிற்சாலை நெருக்கடிகளுமாக சூழ்ந்துக் கொள்கிறது. இந்த தடைகளை எல்லாம் தாண்டிச் சென்றால்,குறுகி, பின் படர்ந்து வரவேற்கிறது திருவொற்றியூர். 

வெற்றியைத் தருகிற ஊர் என்று பொருள் கொண்டால் திருவெற்றியூர் தானே வரணும்… அப்புறம் ஏன் திருவொற்றியூர்? ஆம்… உங்கள் கேள்வி சரியானது தான். இது திருவெற்றியூர் அல்ல.. திருவொற்றியூர் தான். உண்மையில், பிரளய நீரை ஒற்றி எடுத்து நான்முகனுக்கு ஈசன் உதவிய தலம் வீற்றிருப்பதால் இந்த இடத்திற்கு திருவொற்றியூர் பெயர் அமைந்தது.  ஜனசந்தடி, பேரிரைச்சல் எல்லாம் தாண்டி அமைதியான, தெய்வீகமான சூழலில் பார்த்தவுடனேயே அத்தனைப் பயண களைப்பையும் போக்கும் விதத்தில் பேரெழிலுடன் நம்மை வரவேற்கிறாள் வடிவுடையம்மன். 

amman

பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காகவே தினசரி உச்சிகாலை பூஜையில் சிவப்பு நிற புடவையில், பலாப்பழ நைவேத்தியத்தில் அருள்பாலிக்கிறாள். பலாப்பழம், எப்படி உரிப்பதற்கு முட்களும், நார்களுமாய் கடினமாக இருந்தாலும், உள்ளே சுளையாக தித்திப்பைத் தருகிறதோ… அதே போல்  ஞானத்திற்கு மட்டுமே அதிபதியாய் இல்லாமல் நம் பிரச்சனைகளை எல்லாம் களைந்து, நம்மில் ஞானச்சுடர் ஏற்றும் ஒளிவிளக்காய் பிரகாசிக்கிறாள் அன்னை. உச்சிவேளையில் அம்மனை தரிசிக்கும் தனது பக்தர்களுக்கு அஞ்ஞானத்தை நீக்கி இவ்வுலகில் அதிக அறிவுடையவர்களாகவும், ஞானத்தின்  சுடர்களாகவும் தன் கருணை ததும்பும் விழிகளால் நம்மையும் பிரகாசிக்க வைக்கிறாள்.

temple

இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான்,  பூலோகத்தில் தோன்றிய முதல்  வடிவமாக கொள்ளப்படுவதால் ஆதிபுரீஸ்வரர் என்று போற்றப்படுகிறார். திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ,அருணகிரிநாதர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகவும், கலியநாயனாரின் அவதாரத்தலமாகவும், சுந்தரர் கலியாண திருத்தலமாகவும், பட்டினத்தார்  முக்தி பெற்ற தலமாகவும் திகழ்கிறது திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயம்.  சுந்தரரின் காதலுக்கு, தானே தூது சென்று, சுந்தரர்-சங்கிலி நாச்சியார் திருமணத்தை இங்கிருக்கும் மகிழ மரத்தடியில் இறைவனே நடத்திவைத்த தலம். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் ஓருருவம் கொண்ட ஏகபாத மூர்த்தியாக இந்த தலத்தில் காணலாம். தமிழகத்தில் வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்பு இது.

’ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே
நந்தாது எழுதுற்கு நல்லிரவில் 
பிந்தாமல் பந்தம் பிடி’
என்று கம்பர்  தான் செவி வழியாக பகலில் கேட்ட வால்மீகி ராமாயணத்தை  இரவில் எழுகிற போது சாதாரண பெண் ரூபத்தில் தினசரி தீப்பந்தம் ஏந்தி அவருக்கு அருள் புரிந்த வட்டப்பாறை அம்மன், வரப்பிரசாதியாய் இத்தலத்தில் தனி சந்நதி கொண்டுள்ளாள். காளி ரூபத்தில்  வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் வட்டப்பாறை அம்மன்  பக்தர்களின் இன்னல்களை தவிடு பொடியாக்குகிறாள். மேலும் சிறப்பாக, பிரகார வெளியில் 27 நட்சத்திரங்களுக்குரிய தனித்தனி லிங்கங்கள் அமைந்திருக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கேற்ப பிரார்த்தனை செய்து கொள்ள முடியும்.

அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை என்று நம் அனைவராலும் கொண்டாடப்படும் இராமலிங்க அடிகளார் இந்தத் தலத்தில் உள்ள வடிவுடைஅம்மனை தரிசித்த பிறகே தினமும் உணவை உட்கொள்ளும் பழக்கத்தை வைத்திருந்தார். நீண்ட நேரம் வராததால் வீட்டின் கதவு அடைக்கப்பட்ட நிலையிலும், பக்தனின் பசி பொறுக்காத அன்னை அவரது அண்ணியின் ரூபத்தில் நேரில் வந்திருந்து, உணவு வழங்கியதும் இந்த வடிவுடை அம்மன் தான். வள்ளலாரின் பசி போக்கி அவருக்கு ஞானத்தை அள்ளி வழங்கிய அன்னை நம் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கும், ஞானத்திற்கும் வழிவகுப்பாள்.

temple

பிரார்த்தனைகளைச் செய்பவர்கள், வடிவுடையம்மனுக்கு வெள்ளி கிழமைகளில் குங்கும அர்ச்சனை செய்து, நெய் விளக்கேற்றி வழிபட திருமணம், குழந்தைப் பேறு, பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி மட்டுமல்லாமல் எந்த பிரச்சனையாக இருந்தாலும் தன் அருட்கடாட்சத்தால் நம்மை வாழ வைப்பாள் வடிவுடையம்மன். அரண்மனையைப் போல பரந்து விரிந்திருக்கும் இந்த ஆலயத்தின் அரசி வடிவுடையம்மன் தான். வேண்டுதல் வைத்து இந்த ஆலயத்திற்குச் செல்பவர்கள், அலைபேசிகளை எல்லாம் மறந்து விட்டு, நிதானமாக இரண்டு, மூன்று மணி நேரம் சந்நிதியைச் சுற்றிப் பார்த்து, மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள். அடுத்த பெளர்ணமி தினத்திற்குள் உங்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பாள் வடிவுடையம்மன். பெளர்ணமி தினங்களில், ஒரே நாளில் மூன்று அம்மன்களையும் வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதில், திருவுடையம்மன் இச்சா சக்தியாகவும், வடிவுடையம்மன் ஞான சக்தியாகவும், கொடியிடையம்மன் கிரியா சக்தியாகவும் திகழ்கிறார்கள்.

அம்பிகை வடிவுடை அம்மனுக்கு கேரள நம்பூதிரிகளால் இங்கே பூஜை செய்யப்படுகிறது. உங்கள் அக இருளை அகற்ற மறக்காமல் வாழ்வில் ஒரு முறையாவது திருவொற்றியூர் வடிவுடையம்மனை தரிசனம் செய்து வாருங்கள். அப்படியே அம்மனை தரிசித்து திரும்பும் போது ஆலயத்திற்கு வெளியே வடிவுடையம்மனுக்கு உபதேசம் செய்யும் மிகப்பெரிய தட்சிணாமூர்த்தியையும் தரிசித்து வாருங்கள்.